சென்னை: சென்னையின் முதல் எஃகு மேம்பாலம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில்தான் தமிழகத்தின் முதலாவது எஃகு பாலம் அமைக்கப்பட்டது. தற்போது சென்னையிலும் அத்தகைய பாலம் அமைகிறது.
மாநகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான, தெற்கு உஸ்மான் சாலையில் எஃகு மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
நடப்பாண்டு இறுதிக்குள் இப்பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் தொடங்கியதாகவும் எனினும் சற்று தாமதமாக அடுத்த ஆண்டுதான் பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1.2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த எஃகு மேம்பாலம் 131 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
மொத்தம் 8.40 மீட்டர் அகலத்தில் இரு வழிச்சாலையுடன் அமைக்கப்படும் இந்த மேம்பாலத்துக்காக 177 தூண்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கிடையே, சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் ரூ.521 கோடி செலவில் புதிதாக பத்து மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

