கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: பின்னணியைக் கண்டுபிடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து

2 mins read
cb1a3687-fed5-4725-b8a8-daecf6b3ec23
முத்தரசன். - படம்: ஊடகம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை தியாகராயநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இந்த அலுவலகம் மீது அடையாளம் தெரியாத சிலர் திடீரென கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். எனினும், கல் வீச்சு சம்பவத்தின்போது அலுவலகத்தில் யாரும் இல்லை.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே முகவரியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் கட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என முத்தரசன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

“தாக்குதல் தொடர்பாக விசாரிக்க வந்த காவல்துறையினர் மீதும் கற்களும் கண்ணாடிப் புட்டிகளும் வீசப்பட்டுள்ளன,” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இதற்கிடையே, இத்தாக்குதல் சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்,” என வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, இந்தத் தாக்குதல் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்