சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவாலும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை யடுத்து தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.
இந்நிலையில், முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் சில காணொளிக் காட்சிகளை வெளியிட்டு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன் உள்ள இரும்புத் தடுப்பு வேலி முன்பு கடந்த 25ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கருக்கா வினோத் (42 வயது) என்ற ரவுடி கைது செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரணை நடத்திக் கண்டறிய வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் மாளிகை வலியுறுத்தியது.
இது குறித்து காவல்துறை புகார் அளிக்கப்பட்ட பிறகும் ரவுடி கருக்கா வினோத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆளுநர் மாளிகை சுட்டிக்காட்டியது. மேலும், காவல்துறையின் செயல்பாடு குறித்தும் ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
“ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்திய ரவுடி தனியாக வந்துள்ளார். தனது ஆடைக்குள் ஒளித்து வைத்திருந்த இரண்டு பெட்ரோல் நிரம்பிய கண்ணாடிப் புட்டிகளை மாளிகை மீது வீசியுள்ளார். அவை அங்கிருந்த தடுப்பு வேலி மீது பட்டு கீழே விழுந்தன. மாறாக ஆளுநர் மாளிகைக்குள் அவை வீசப்படவில்லை.
“அவரை ஐந்து காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவலர் ஒருவர்தான் புகார் கொடுத்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய ரவுடி அண்மையில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தபோது அவருடன் மேலும் 93 பேர் வெளியாகினர். அவர்களுக்கும் கருக்கா வினோத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே ஆளுநர் மாளிகை சொன்னபடி சம்பவம் நடக்கவில்லை. இது மிகைப்படுத்தப்பட்ட புகார்,” என காவல்துறை தெரிவித்துள்ளது.

