சென்னை: அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களைப் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி வழி இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் மொத்தம் ஐம்பது நாடுகள் பங்கேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிப்பக உரிமைகளை விற்க, வாங்குவதற்கான தளமாக இக்கண்காட்சி் அமையும் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு ஆயிரம் தமிழ் நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும் அவற்றுள் இதுவரை நாற்பது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
‘தமிழை உலகத்துக்குக் கொண்டு செல்வோம்; உலகைத் தமிழுக்குள் கொண்டு வருவோம்’ என்ற கருப்பொருளின்கீழ் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
“ஆண்டுதோறும் இருநூறு தலைப்புகளில் அமைந்த நூல்களை ஸ்பானிய, பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆயிரம் புத்தகங்களை மொழி பெயர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என தமிழகப் பொது நூலகத்துறையின் இயக்குநர் இளம் பகவத் தெரிவித்தார்.
கடந்த நூறு ஆண்டுகளில் நூற்றுக்கும் குறைவான நூல்களே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழக அரசின் இம்முயற்சியைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.