சென்னை: எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தமிழகம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை களிலும் மழைக்காலச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பத்து வாரங்களுக்கு, தலா ஆயிரம் என்ற வகையில் மொத்தம் பத்தாயிரம் இடங்களில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கான நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்திட வாழ்வின் முதல் 1,000 நல்நாட்கள் நிதி உதவி திட்டம் மூலம் முதற்கட்டகமாக ஐந்தாயிரம் மகப்பேறு தாய்மார்கள் பலனடைவர் என்றும் அமைச்சர் கூறினார்.
“தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை ஏற்பட்டிருக்கும் டெங்கி பாதிப்புகளின் எண்ணிக்கை 5,896. மருத்துவமனைகளில் 607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை ஏழு பேர் டெங்கி பாதிப்பால் மாண்டுவிட்டனர்.
“ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின்போதும், தென்மேற்குப் பருவமழையின் போதும் மழைக்கால நோய்களான டெங்கி, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இந்த ஆண்டைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழை மட்டுமல்லாமல் கோடைக்கால மழை, வெப்பச்சலன மழை என்று தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டு இருக்கிறது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.