நிலவில் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையம் அமைக்க வீரமுத்துவேல் வலியுறுத்து

1 mins read
5b01cab5-b0b0-4bd8-8d77-906ba3482bcc
வீர முத்துவேல். - படம்: ஊடகம்

கோவை: ‘சந்திரயான்-3’ திட்டம் நாட்டின் சாதனையாக மாறியுள்ளது என அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறியுள்ளார்.

வருங்காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ மற்றும் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாகக் கோவையில் பள்ளி மாணவ, மாணவியருடனான கலந்துரையாடலின்போது அவர் குறிப்பிட்டார்.

நிலவில் அனைத்துலக விண்வெளி நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அதைக் கருத்தில் கொண்டுதான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது என்றும் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

இதற்காக, தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நிலவின் தென்துருவம் அருகே தரையிறங்கிய பெருமையை இந்தியா அடைந்துள்ளது என்றார்.

“சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு அருகேதான், ரஷ்யாவின் விண்கலமும் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக அவர்களின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது.

“தென்துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்குவது எளிதல்ல. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றையெல்லாம் சமாளித்து, தென்துருவத்துக்கு அருகே லேண்டரை தரையிறக்கினோம். இதுவரை எந்த நாடும் இந்தச் சாதனையைப் புரியவில்லை,” என்று வீரமுத்துவேல் தெரிவித்தார்.

வரும் ஆண்டுகளில் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் பல்வேறு முக்கியமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“தற்போது இஸ்ரோவில் இருபது திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இஸ்ரோவில் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்றார் வீரமுத்துவேல்.

குறிப்புச் சொற்கள்