ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருபக்கம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல், மறுபக்கம் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை என தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 23 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை சிறைப் பிடித்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படை கைது செய்த 37 மீனவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஐந்து மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, இலங்கை கடற்படையினர் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“கடந்த 12 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், அப்போராட்டத்தை முடித்துக் கொண்டு, சனிக்கிழமைதான் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். ஆனால் முதல் நாளிலேயே அவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இரக்கமற்ற செயல் ஆகும்.
“தமிழக மீனவர்களைப் பழிவாங்க வேண்டும். மீண்டும், மீண்டும் கைது செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்க வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் நோக்கம்,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

