தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகமாக மாறிவிட்டது: முதல்வர் குற்றச்சாட்டு

2 mins read
64f02165-2994-462a-af7a-918e0f2c3b7b
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: ஆளுநர் ரவி பாஜக உறுப்பினரைப் போல் செயல்படுவதாகவும் தமிழக ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகமாக மாறிவிட்டது என்றும் முதல்வர் மு.க.ஸடாலின் விமர்சித்துள்ளார்.

இத்தகைய நிலை உருவாகி இருப்பது வெட்கக்கேடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம், எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா திங்கட்கிழமை சிறப்பாக நடந்தேறியது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது என்றார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரையும் தொடர்பு கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

“பிரதமருக்கும் கடிதம் எழுதி உள்ளோம். இதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளோம். மத்திய அமைச்சரை சந்தித்து மீனவர் பிரச்சினை பற்றி பேசுமாறு கூறியுள்ளோம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

அண்மையில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும் சாலையில்தான் வீசப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இது தொடர்பான கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காணொளிக் காட்சிகள் செய்தியாளர்களுக்கு காவல்துறை சார்பாக போட்டுக் காண்பிக்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

“ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு இந்த பொய்யான செய்தி பரப்பப்படுகிறது. ஆளுநர் பாஜக கட்சி உறுப்பினராக மாறிவிட்டார். ஆளுநர் அலுவலகம் பாஜக கட்சி அலுவலகமாக மாறிவிட்டது இதுதான் வெட்கக்கேடு,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்