சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பான விசாரணையில் அமலாக்கத் துறையுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும் கான்பூரில் உள்ள ஐஐடி கல்வி நிலையமும் இணைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் எடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. மேலும் சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கு விவரங்களை அறிக்கையாக அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் உதவுமாறு கேட்டு இஸ்ரோ, ஐஐடி விஞ்ஞானிகளுக்கு அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
“இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழகத்தில் உள்ள மணல் எடுக்கும் ஆற்றுப்படுகைகளில் வெட்டியெடுக்கப்பட்ட மணலின் பரப் பளவு மற்றும் அளவை ஆய்வு செய்து மதிப்பிடுவார்கள்.
“பின்னர் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆற்றுப்படுகை தளங்களின் செயற்கைக்கோள் படங்களை வழங்கும் பணியில் இஸ்ரோ ஈடுபடும்,” என அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏசியாநெட் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ அளிக்கும் செயற்கைக்கோள் படங்களை வைத்து மணல் அகழ்வின் அளவைக் கணக்கிடவும், சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட அளவு மற்றும் கருவூலத்திற்கு ஏற்படும் இழப்பை மதிப்பிடவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக கிடைத்துள்ள மெமரிகார்ட், மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றில் உள்ள தகவல்களைப் பெறுவது உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளில் ஐஐடி நிபுணர்கள் ஈடுபட உள்ளனர்.
பல்வேறு புகார்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

