அரசு செலவில் ராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணம்: 300 பேருக்கு வாய்ப்பு

அரசு செலவில் ராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணம்: 300 பேருக்கு வாய்ப்பு

படம்: ஊடகம்

30 Oct 2023 - 5:53 pm

1 mins read

சென்னை: தமிழக அரசு செலவில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் 300 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது என்றும் ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 20ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு 200 பேர் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்றும் இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 200 பேர் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

“தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டுக்கான அறிவிப்பில் ‘ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமிகோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக 300 பேர் அழைத்துச் செல்லப்படுவர், அதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசே ஏற்கும்’ என அறிவிக்கப்பட்டது.

“அதன்படி, ஆன்மிகப் பயணம் செல்ல அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், தலா 15 பேர் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்று இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பயணம்