சென்னை: தமிழகச் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
கடற்கரைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மாநிலத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நீலக்கொடி மதிப்பீட்டை (அந்தஸ்தை) பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
நீலக்கொடி மதிப்பீடு என்பது பல்வேறு விதிமுறைகளின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள கடற்கரைகளுக்கு வழங்கப்படும் அந்தஸ்து ஆகும். பல்வேறு உலக நாடுகளில் உள்ள கடற்கரைகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
நீலக்கொடி மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான சூழல், படுத்து ஓய்வெடுக்கும் வசதி, சாய்வு தள நாற்காலிகள் ஆகிய வசதிகள் இருக்க வேண்டும்.
குப்பை இல்லாத சுகாதாரமான கடற்கரையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆராயப்படும்.
மேலும், நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவதற்கான வசதி, கண்காணிப்புக் கருவிகள், போக்குவரத்து வசதி ஆகியவை இருந்தால் மட்டுமே அந்தக் கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோவளம் கடற்கரைக்கு மட்டுமே நீலக்கொடி அந்தஸ்து உள்ளது. அங்கு அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை கவர உரிய ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
“நீலக்கொடி தகுதி உள்ள கடற்கரைகளைத்தான் அனைத்துலக சுற்றுலா முகவர்கள் பரிந்துரைப்பர். எனவே கோவளம் கடற்கரையைப் போன்றே தமிழகத்தில் உள்ள மற்ற கடற்கரைகளை பேணிக்காக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஜப்பானில் நடைபெற்ற சுற்றுலா கண்காட்சியில் தமிழக சுற்றுலா தலங்களின் சிறப்புகளை விளக்கும் புகைப்பட புத்தகம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தை கண்காட்சிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இக்கண்காட்சியில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை, தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரங்கு ஒன்றை அமைத்திருந்தது.
அங்கு ஸ்ரீரங்கம் குதிரை சிற்ப தூண்களின் மாதிரி வடிவம், மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

