தென்காசி: விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்டியடிக்க ஏதுவாக தென்காசிப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன் சொந்த முயற்சியில் ஒரு துப்பாக்கியைத் தயாரித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
வனவிலங்குகளை விரட்டி யடிக்க வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் விவசாயி களும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது.
கற்களைக் கொண்டு தாக்குவது, சத்தமாக ஒலி எழுப்பி குரங்கு, பன்றிகளை விரட்டியடிக்கின்றனர் விவசாயிகள்.
இந்நிலையில், குற்றாலம் ஐந்தருவி பகுதியைச் சேர்ந்த சுடலை என்ற விவசாயி, எழுபது வயதாகி விட்டதால் தம்மால் தன்னந் தனியாகப் போராடி விலங்குகளை விரட்ட முடியாமல் தவித்தார்.
பின்னர், தன் வீட்டில் இருந்த நெகிழிக் குழாய்கள், எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் ‘லைட்டர்’ உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி துப்பாக்கி போன்ற கருவியை தயாரிக்க முடிவு செய்தார்.
தற்போது நெகிழிக் குழாய் ஒன்றில் கற்கள், காகிதங்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர் உருவாக்கிய கருவி பார்ப்பதற்கு துப்பாக்கி போன்று உள்ளது.
இதில் உள்ள விசையை அழுத்தும்போது கற்களும் ஒலியும் வேகமாக வெளிப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் ஓட்டம் பிடிக்கின்றன. விவசாயி சுடலையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.