தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுநர், தமிழக அரசு உச்சக்கட்ட மோதல்

2 mins read
064daa74-f016-43ab-9497-57411fb00a2f
ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின். - படங்கள்: ஊடகம்

சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு சட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றுள் பல மசோதாக்களுக்கு ஆளுநர் மாளிகை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக ஏசியாநெட் தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எனவே சட்ட மசோதாக்களுக்கு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் தமிழக ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை.

அப்போது இரு தரப்புக்கும் இடையே தொடங்கிய மறைமுக மோதல் செவ்வாய்க்கிழமை பெரிதாகி உள்ளது. தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய பத்து மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கப் பார்ப்பதாக ஆளும் திமுக குற்றஞ்சாட்டி உள்ளது. ஆளுநர் மாளிகை பாஜகவின் கட்சி அலுவலகம்போல் மாறிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பகிரங்கமாகச் சாடி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்