சென்னை: தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக அலுவலகத்தில் வருமான வரித்துறை இரு நாள்களாக அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை தொடங்கிய சோதனையின்போது பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காணப்பட்டனர்.
வரி ஏய்ப்பு தொடர்பில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வருமானவரி அதிகமாக செலுத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மிகவும் குறைவாக வரி செலுத்திய காரணத்தினால் வருமான வரி சரிபார்ப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.
அண்மையில்கூட முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய இடங்களிலும், சவீதா குழுமத்துக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அப்போது கோடிக்கணக்கான மதிப்புள்ள ரொக்கப் பணம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது.

