சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி கண்ணன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகியான ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும் அக்குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அக்கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கண்ணன் விசாரணைக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டார். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி.
இந்த வழக்கு தொடர்பாக கல்லூரிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து காவல்துறை இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை அப்பேராசிரியர் மறுத்திருந்தார்.