சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
கடந்த 10 நாள்களில் மட்டும் எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணி சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி சென்னையில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ எனும் கருப்பொருளில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தனது கையெழுத்தையும் பதிவு செய்தார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களின் கையெழுத்துகளை திரட்டி வருகின்றனர். ஐம்பது நாள்களில் ஐம்பது லட்சம் கையெழுத்துகளைப் பெற வேண்டும் என திமுக தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது.
மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம்கள் அமைத்து மின்னிலக்க வடிவில் கையெழுத்துகள் பெறப்பட்டு வருகின்றன.
“நீட் தேர்வுக்கு எதிராக ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கையெழுத்திட்டு வருகிறனர். இணையம் வழியாகவும் கையெழுத்தைப் பதிவு செய்வதில் இளையர்கள் மத்தியில் ஆர்வம் காணப்படுகிறது.
“கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட முதல் 10 நாள்களில் மட்டும் 2.11 லட்சம் பேர் இணையம் வழி கையெழுத்திட்டுள்ளனர். இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்துகளைப் பதிவு செய்துள்ளனர். திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணையம் வழி கையெழுத்துகளைப் பதிவிட்டுள்ளனர்,” என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐம்பது லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதும் அவை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி நடக்கும் திமுக இளையரணி மாநாட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திமுக கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நீட் விலக்கு சட்டத்திற்கு அதிபரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு அரசியல் ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்றும் கையெழுத்து இயக்கம் போன்றவற்றை நடத்துவதால் பயனில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.