சென்னை: ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை பாஜக தலைமை ஒரு செயல்திட்டமாகவே வைத்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மத்தியில் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அவ்வப்போது நாடு தழுவிய அளவிலான அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துகளை ஒலிப்பதிவு வடிவில் வெளியிடுகிறார்.
அண்மைய பதிவு ஒன்றில், பாஜக தலைமையானது அரசியல் சட்டப்படி ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை எனச் சாடியுள்ளார்.
“படிப்படியாக ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை, ஒற்றை அதிகாரம் பொருந்திய பிரதமர் என்று நாட்டை நகர்த்திச் செல்ல முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு சொல்வதைவிட, உலகத்தின் மிகப்பெரிதான இந்திய ஜனநாயக அமைப்பையே சின்னபின்னப்படுத்தி சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள் எனலாம்.
“மொத்தத்தில், பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றன,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தோடு மத்திய அரசு விளையாடுவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப் பண்பும் கலாசாரமும் உள்ளது என்று கூறியுள்ளார்.
“ஒவ்வொரு மாநிலத்துக்கும் என– தனிப்பட்ட சிந்தனைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் அழிப்பதற்கான கொள்கைதான் தேசிய கல்விக் கொள்கை.
தொடர்புடைய செய்திகள்
“மாநிலங்களைச் செயல்படவிடாத மத்திய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செயல்படுத்த முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஓர் ஆட்சி, மத்தியில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

