சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் வேலையில் இறங்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
பாஜக அரசு தனக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளை ஒடுக்க வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வந்தது. அதுபோதாதென்று இப்போது அவர்களது கைப்பேசியை ஒட்டுக் கேட்பதில் இறங்கியுள்ளது.
பாஜக என்ன செய்தாலும் அதன் தோல்வி தவிர்க்க முடியாதது. இண்டியா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.
மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைய சூழல் உள்ளது. தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை மத்திய பாஜக அரசு மிரட்டிக் கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் கைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்தப் புகார் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்போவதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியைத் தழுவும் என்ற செய்தியே பேசப்படுகிறது. இந்தியாவைக் காக்க ‘இண்டியா’ கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தர வேண்டும் என்று ஸ்டாலின் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுத இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொய்த்ரா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்கள் கைப்பேசிகள்/மின்னஞ்சல் ஒட்டுக்கேட்கப்படுவது, உளவு பாா்க்கப்படுவதைப் பற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகளை அழைத்து மக்களவைத் தலைவா் விசாரிக்க வேண்டும். நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு இந்த விவகாரத்தை உடனடியாகக் கையிலெடுக்க வேண்டும். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கவலைப்பட வேண்டிய உண்மையான விதிமீறல் இது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளாா்.
எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு ‘ஆப்பிள்’ நிறுவனம் எச்சரிக்கைத் தகவல் அனுப்பியுள்ள விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.
“தகவல்கள் மற்றும் பரவலான ஊகங்களின் அடிப்படையில், அரசால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக உண்மைத் தகவல்களுடன் விசாரணையில் இணையுமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளாா்.