சாலை விபத்துகள் தமிழகத்தில் ஆக அதிகம்

2 mins read
6703fb69-072a-4c8b-bc44-527a6b9868ed
போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணா சாலை. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.

உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழகமும் உள்ளன.

இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என 2022ஆம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,68,491 போ் உயிரிழந்தனா். 4,36,366 போ் காயமடைந்தனா்.

2021ஐ ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9 விழுக்காடும் உயிரிழப்பு 9.4 விழுக்காடும் காயமடைவது 15.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.

இரு சக்கர வாகனங்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாம் ஆண்டாக அதிகமாக உள்ளது.

2024-இல் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது. 2022ஐ பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன.

சாலை விபத்துகளை தடுப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை அமல்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சு உறுதிபூண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்