சென்னை: கடல் வணிகத்தில் தமிழகம் தலைசிறந்து விளங்கியதாக அதிபர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றிய அவர், மாணவர்கள் சூழலியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“தென்னிந்தியாவில் பல்லவர்கள் வலிமையான கடற்படையை கொண்டிருந்தனர். 10, 11ஆம் நூற்றாண்டுகளில் சோழர்களின் ஒப்பிட முடியாத கடல்சார் திறன் மூலம், நமது வணிகம், பாரம்பரியம் நீண்டதூர நாடுகளுக்கும் பரவியது.
“தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் பிரிவின் பங்களிப்பு மிக அதிகம். வர்த்தகத்தில் 95 விழுக்காடும், அதன் மதிப்பில் 65 விழுக்காடு கடல்சார் போக்குவரத்து மூலமாகவே நடைபெறுகிறது,” என்றார் அதிபர் முர்மு.
உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்துறையில் இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
“உலக அளவில் துறைமுக வளர்ச்சியில் முதல் இருபது நாடுகளில் இந்தியா இல்லை. சிறந்த ஐம்பது துறைமுகங்களில் இரண்டு மட்டுமே இந்தியாவில் உள்ளன. எனவே, கையாளும் திறன், கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ள அடுத்த கட்டத்துக்கு நாம் முன்னேற வேண்டும். மீன்பிடி படகுகள் இயந்திரமயமாக்கலும் குறைவாகவே உள்ளது.
“ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான சமுத்திரயான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஆழ்கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள வளங்கள், உயிரி பன்முகத்தன்மை குறித்த மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன,” என்றார் அதிபர் முர்மு.

