தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நீட்’ தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது: உயர் நீதிமன்றம்

2 mins read
efb117d3-f17f-4365-97e5-bbc6abe8308a
படம்: - தமிழக ஊடகம்

சென்னை: ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.

‘நீட்’ தேர்வு தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு எதிராக அமைந்தால் வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக 5 மில்லியன் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கியுள்ளார்.

“இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். ‘நீட்’ தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

“ அந்த சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர், போராட்டம் அறிவிக்க முடியாது. நீட் தேர்வுக்கு எதிராக, கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாகக் கருத முடியாது.

“ஒரு அமைச்சர், சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியாது. எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே துவங்கியுள்ளதால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். மேலும், படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். எனவே, பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

“கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? மத்திய அரசின் நீட் தேர்வு முடிவுகளால் மாணவர்கள் நலனுக்கு எதிராக இருந்தால் வழக்கு தொடரலாம்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

“அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது. எனவே, இந்த வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக,” நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

மேலும், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்