தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை வந்த ஆளுநருக்கு கறுப்புக்கொடி: ஏராளமானோர் கைது

1 mins read
bdf22a3c-2ec3-400d-9b9d-2e13c3aa7545
மதுரைக்கு வருகை தந்துள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக நாகமலை புதுக்கோட்டையில் நான்குவழிச் சாலையில் கட்சிக் கொடிகளுடனும் கறுப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள். - படம்: இந்து தமிழ்

மதுரை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக இளையர் சங்கம், மாதர் சங்கம் ஆகியவற்றுடன் ஏராளமான மக்களும் திரண்டு கறுப்புக் கொடிகளுடனும் கறுப்புப் பலூன்களைப் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்த காவல்துறையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து ஏராளமானவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ் நாட்டின் மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன் வரைவு உள்ளிட்ட தமிழகத்தின் நலனுக்காக பரிந்துரைக்கப்பட்ட சட்ட முன்வரைவு பலவற்றுக்கு ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் நான்குவழிச் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதுரை புறநகர் - மாநகர் பகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சிக் கொடிகளுடனும், கறுப்புக் கொடிகளுடனும் காலை 7.30 மணிக்கே திரண்டனர். அதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவிக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

குறிப்புச் சொற்கள்