தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உரிமைத்தொகை கேட்டு 1.18 மில்லியன் பெண்கள் மேல்முறையீடு

1 mins read
de2cb0ac-35c3-40c4-a185-54f2bfac0bc3
மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. - படம்: ஊடகம்

சென்னை: தீபாவளித் திருநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வங்கிக் கணக்கில் செலுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதுமிருந்தும் 16.3 மில்லியன் பேர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தனர்.

அவர்களில் 10.65 மில்லியன் பேர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியானவர்களாகத் தேர்வுசெய்யப்ட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, அக்டோபர் 25ம் தேதிவரை 1.185 மில்லியன் மகளிர், தங்களுக்கும் உரிமைத்தொகை வழங்கக் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகுதியானவர்களுக்கு இம்மாதம் 25ஆம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என்றும் தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகுதிபெற்றிருந்தும் பணம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு இம்மாதம் 10ஆம் தேதிக்குள் பணம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்