தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவு நகரம் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என அன்புமணி வலியுறுத்து

2 mins read
e6803c84-365a-44f2-96d1-0b96909afff9
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க 1,703 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இக்கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கா 1,146 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட மொத்தம் 1,703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

இது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அன்புமணி, இத்திட்டத்தை அரசு நிலங்களில் செயல்படுத்துவதற்கு பதிலாக சென்னைக்கு அருகில் விளைநிலங்களில் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும் என்றும் அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை பாமகவும் வரவேற்றது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்கள் பறிக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது,” என அன்புமணி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

விளை நிலங்களை உழவர்கள் கடவுளாக பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அன்புமணி,கையகப்படுத்தப்பட உள்ள 1,146 ஏக்கர் நிலங்களுக்கு விலையாக ரூ.174.52 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ஏற்க இயலாது என தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசு நினைத்தால், தென் மாவட்டங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள அரசு நிலங்களில் அறிவு நகரத்தை அமைக்கலாம்,” என அன்புமணி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்