சென்னை: பிரபல தொழில் அதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதனின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது திரை உலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் திரை அரங்கம் நடத்தி வரும் அபிராமி ராமநாதனனுக்கு சொந்தமாக ‘மால்’களும் உள்ளன. பல்வேறு தொழில்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக தொழில் துறையிலும், திரைதுறையிலும் முக்கிய புள்ளியாக திகழும் அபிராமி ராமநாதனின் அலுவலகம் சென்னை போயஸ் தோட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அவரது மேலாளர் மோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அபிராமி ராமநாதன் வீட்டிலிருந்து கணக்கில் வராத ஏராளமான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நகைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திரையுகில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் அபிராமி ராமநாதன் மீது வருமான வரித்துறையின் பார்வை பதிந்துள்ளதை அடுத்து, திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அடுத்து திரைத்துறையினரும் குறிவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கை நீடித்தது.

