ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: 200,000 விசைத்தறிகள் முடக்கம்; தினமும் ரூ.100 கோடி இழப்பு

2 mins read
8ac898f1-26e0-458a-a950-0ecbeb202fb9
கோவை, திருப்பூரில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் முடங்கி உள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

கோவை: தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டம் அடுத்த இரு நாள்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும் வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும் விலை குறைப்பை வலியுறுத்தியும் ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஏராளமானோர் ஜவுளி உற்பத்தித் துறையில் உள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக இவ்விரு மாவட்டங்களில் மட்டும் நாள்தோறும் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்ததை அடுத்து இரண்டு லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 1,500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன என்றும் தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்த விசைத்தறிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் நீட்டிக்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்