கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: பிரேமலதா

கூட்டணி குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: பிரேமலதா

1 mins read
c3cb06d1-d258-485e-82e8-78cacc89ffa9
பிரேமலதா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து தாம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியான செய்தியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தரப்பு மறுத்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடும் ஊடகத்தை கண்டிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட யாரும் நம்பவேண்டாம் என்றும் கூட்டணி குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அண்மையில் வெளியேறியது. இதனால் தமிழக அரசியல் களத்தில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக, பாமக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அது தவறான தகவல் என தேமுதிக தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்