மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை மீண்டும் சோதனை

மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை மீண்டும் சோதனை

1 mins read
f6589846-656d-4f76-b17f-d939ca4fee6e
மணல் குவாரியில் லாரிகள். - கோப்புப்படம்: ஊடகம்

திருச்சி: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து திருச்சி மணல்குவாரி வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.

தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததை அடுத்து, அமலாக்கத் துறை அண்மையில் பல்வேறு குவாரிகளில் சோதனை மேற்கொண்டது.

அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) கான்பூரில் உள்ள ஐஐடி கல்வி மையத்தின் உதவிகள் கோரப்படும் என அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஐஐடி மாணவர்களின் உதவியோடு திருச்சியில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி உள்ளனர். வெள்ளிக்கிழமையன்று ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் உள்ளிட்ட நவீனக் கருவிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

ஐம்பது லாரிகளில் மட்டுமே மணல் அள்ளிச் செல்ல வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக திருச்சி மணல் குவாரிகளில் நாள்தோறும் ஐநூறு லாரிகளில் மணல் அள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழு மணி நேரம் நீடித்த சோதனைக்குப் பிறகு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரும் உதவியாளர்கள் இருவரும் என மூன்று பேர் அமலாக்கத் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்