சென்னை: பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறையினர் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக 1,500 பட்டாசுக் கடைகளைத் திறக்க முடியாமல் தவிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசுக் கடைகளுக்கு வழங்கப்படும் தடையில்லாச் சான்றிதழை வழங்குவதில் ஏற்படும் தாமதமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக வியாபாரிகள் சாடி உள்ளனர்.
இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருவதாகவும் கான்கிரீட் கட்டடங்களில் அமைக்கப்படும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
தகரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கும் அனுமதி அளித்தால் மட்டுமே தீபாவளி சமயத்தில் நஷ்டமின்றி பட்டாசுகளை விற்க முடியும் என்று வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.