சென்னை: அரசுப் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டே பயணித்தனர் மாணவர்கள். அவர்களை அடித்துக் கீழே இறக்கிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டார் பாஜக பெண் நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார்.
அதன்படி தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாள்கள் அவர் கையெழுத்து இடவேண்டும் என நீதிபதி ராம்குமார் உத்தரவிட்டார்.
சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிச் செல்வதை பார்த்தால் அனைவருக்கும் கோபம் வரும். ஆனால் அவர்கள் எதுவும் கேட்காமல், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள். அவ்வாறு இல்லாமல் இதை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை நான் காந்தியின் வழியை பின்பற்றும் ஆள் இல்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவருமே நேத்தாஜியின் வழியைப் பின்பற்றுபவர்கள். மாணவர்களை அடித்தது சரி என்றும், அனைவரையும் அடிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்புடன் இருந்தால்தான் தவறு செய்யப் பயப்படுவார்கள்,” என்று கூறினார்.
போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு சென்றதைக் கண்டார் ரஞ்சனா. உடனே அப்பேருந்தை நிறுத்தி அதில் ஏறினார். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்ற பேருந்தின் ஓட்டுநரையும் நடத்துநரையும் கடுமையாக கண்டித்துப் பேசினார்.
பின்னர் அவராகவே சென்று படிக்கட்டில் தொங்கியவர்களை இறங்கும்படி எச்சரித்தார். இறங்க யோசித்த சிலரை தாக்கினார். தொடர்ந்து ஒருமையில் பேசியதோடு, அவர்களை அடித்து கீழே இறக்கினார். எதிர்ப்புத் தெரிவித்த சிலரிடம், “ஆமா, நான் போலிஸ் தான் இறங்கு,” என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காணொளிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரசுப் பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.