சென்னை: திராவிடக் கோட்பாட்டை ஒழிக்கும் மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், பிரிவினைக் கொள்கைகளை, கோட்பாடுகளை ஒழிக்கும் கூட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லை என்று திங்கட்கிழமை கூறியது.
இது பற்றிக் கூறிய நீதிமன்றம், அதிகாரத்தில் உள்ளவர்கள் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள கருத்துகளினால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர வேண்டும் என்று கூறியது.
இதன் தொடர்பில் செப்டம்பர் மாதம் சனாதன ஒழிப்பு கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன் எனக் காவல்துறையினருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
திராவிடக் கோட்பாட்டை ஒழிப்பது, தமிழர்களை ஒன்றிணைப்பது என்ற பெயரில் மாநாடு நடத்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் அனுமதி கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் பெரிய அளவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரு மகேஷ் கார்த்திகேயன் தமது மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதன் மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் மீது தமிழக காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை கடமை தவறி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். “சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.