சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அத்திட்டமானது தமிழக நலனிற்கு எதிரானது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் நோக்கத்துடன் இருபது இடங்களில் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கோரி உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களை மலடாக்கி, பாலைவனமாக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இத்திட்டம் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இந்த பேரழிவு திட்டத்தை அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஓ.என்.ஜி.சி இயற்கைக்கு எதிரான தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதனால் நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது.
“எனவே, இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது ராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அந்நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க முயற்சி செய்வது இது முதல் முறை அல்ல,” என்றும் ராமதாஸ் கூறி உள்ளார்.