சென்னை: மத்தியில் உள்ள பாஜக அரசு ரயில்வே துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் செயல்படுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை வழியாக திருவனந்தபுரத்திற்கு பலமடங்கு கட்டணத்தில் ரயில் இயக்கப்படுவதாக ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அந்நிறுவனம் ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் தாமாக விளம்பரம் வெளியிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தபோது அப்படி ஒரு ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை எனப் பதில் அளித்ததாக தெரிவித்துள்ளார் எம்பி சு.வெங்கடேசன்.
“அனுமதி வாங்காமல் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தின் மீது ரயில்வே நிர் வாகமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே துறையின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் சூழலில் தனியார் நிறுவனம் தனது விருப்பப்படி பெரும் கட்டணக்கொள்ளையில் ரயில் இயக்கப்படும் என்று விளம்பரம் தருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
“பயணச்சீட்டு விற்று பெரும் லாபம் சம்பாதித்து சலித்துப்போய் இப்போது ரயில் தடத்தை விற்று லாபம் சம்பாதிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இதன் விளைவு தனியாரின் கைகள் ரயில்வே துறையின் மீது சுதந்திரமாக படர்கிறது. இது ரயில்வேயின் நலனுக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானது,” என்று எம்பி சு.வெங்கடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.