சென்னை: இனி அதிமுக எனும் கட்சிப் பெயரையும் கட்சிக் கொடியையும் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சி நான்கு வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சட்டப்போராட்டத்தை அடுத்து அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், அதிமுக என்ற பெயரையும் கட்சிக் கொடியையும் ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் இருந்து நீக்கபட்ட ஒருவர் கட்சிப் பெயரையும் கொடியையும் பயன்படுத்துவது தவறு என பழனிச்சாமி தரப்பு தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை ஏதேனும் பிறப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
எனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.