சென்னை: நூறு ரவுடிகளின் வீடுகளில் நள்ளிரவு வேளையில் சென்னை காவல் துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரவுடிகளின் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
சென்னையிலும் அதன் புற நகர்ப் பகுதிகளிலும் ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயலின் தன்மை களுக்கு ஏற்ப ரவுடிகள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டனர். குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இதுவும் முக்கிய மானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சோழவரம் பகுதி அருகே இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் நடவடிக்கையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அண்மைய சில நாள் களாக ரவுடிகளின் கொட்டம் அடங்கியுள்ளது. பல ரவுடிகள் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் காவல்துறை தயாரித்துள்ள ரவுடிகள் பட்டியலில் 1,500 பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அந்த ரவுடி களின் வீடுகளில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை நள்ளிரவு முதற்கட்டமாக நூறு ரவுடிகளின் வீடுகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். வீடுகளில் இருந்த ரவுடிகளிடம் சில கேள்விகளை எழுப்பி உரிய பதில்களையும் தகவல்களையும் பெற்றனர். வெளியூர்களில் உள்ள ரவுடி களையும் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.
மேலும் ரவுடிகளின் செயல் பாடுகளில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் குற்றச் செயல்களை தவிர்க்க இயலும் என்றும் ரவுடிகளின் குடும்பத் தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கை மேலும் சில நாள்கள் நீடிக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

