தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேள்விகளால் மன உளைச்சலை ஏற்படுத்தினர்: வருமான வரித்துறையினரைச் சாடிய அமைச்சர் ஏ.வ.வேலு

2 mins read
19c7d6d2-df3b-4146-b23e-f56b6e00347f
எ.வ.வேலு. - படம்: ஊடகம்

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தன் குடும்பத்தினருடன் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தமக்கு எந்தவிதக் கோபமும் இல்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் வெறும் அம்புதான் என்றும் ஏவிவிட்டவர்கள் எங்கேயோ உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நான் தங்கியிருந்த இடத்தில் அதிகாரிகள் சல்லடைபோட்டு தேடினர். விழுப்புரம், வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் எனக்குத் தெரிந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அச்சுறுத்தி உள்ளனர்,” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

தமது உதவியாளரிடம் ஐந்து நாள்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவரை அச்சுறுத்தி கண்ணீர்விட்டு அழும் அளவிற்கு நிர்பந்தப்படுத்தி உள்ளனர் என்றும் அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டினார்.

ஐந்து நாள்களுக்கு முன்பு தமது கார் ஓட்டுநர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அமைச்சருக்கு கார் ஓட்டுவது தவறா என்று கேள்வி எழுப்பினார்.

“என் மனைவி, மகன்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தும் விதம் கேள்விகள் கேட்டுள்ளனர். அடிப்படையில் நான் விவசாயி வீட்டுப் பிள்ளை. பின்னர் அச்சகம் நடத்தினேன். அதையடுத்து, லாரிகள் வாங்கி தொழிலை விரிவுபடுத்தியதுடன் சென்னையில் படத் தயாரிப்பாளராகவும் விநியோகிப்பாளராகவும் இருந்தேன்.

“அப்படி ஈட்டிய பணத்தைக் கொண்டு அறக்கட்டளை தொடங்கி பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி உள்ளோம். இதனால் பல்வேறு கிராமங்களில் ஏராளமானோர் கல்வி அறிவு பெற்றுள்ளனர்,” என்று ஏ.வ.வேலு தெரிவித்தார்.

கடந்த ஐந்து நாள்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் இவரை மையப்படுத்தி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது பதினெட்டு கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் ஆனதாக ஊடகச்செய்தி தெரிவிக்கிறது. எனினும் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்