சென்னை: ஏரியை வீட்டு மனைகளாக்கி விற்க முயற்சி நடப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அருகே உள்ள காயரம்பேடு கிராமத்தில் உள்ள வேளாண் பயன்பாட்டுக்கான, சித்தேரியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யும் முயற்சியில் தனியார் நில வணிக நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அந்த ஏரி சுமார் 21 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும் தனியார் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி உள்ளார்.
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்ட ஏரியை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க வருவாய்த்துறை அதிகாரிகளும் துணைபோவது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ள அன்புமணி, சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக காயரம்பேடு கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.
நீர்வளங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அவை உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.