உடல்நலம் குன்றியவர்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் ஈசல் திட்டு மக்கள்

2 mins read
b263a22a-ae6f-445f-a705-19e280859d37
உடுமலைக்கு அருகேயுள்ள குழிப்பட்டியில் இருந்து உடுமலை மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் உறவினர்கள். - கோப்புப்படம்: தி இந்து

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மலைக் காடுகளில் உள்ள ஈசல்திட்டு, குருமலை, கழிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட ஏராளமான சிற்றூர்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு மின்சாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் பல காலமாகவே மறுக்கப்பட்டு வருகிறது. சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கேட்டு அந்த மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நோய்வாய்ப்பட்டோரை வெகுதொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அதற்கு எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லை. அந்த நோயாளிகளை தொட்டில் கட்டி நெடுந்தொலைவு தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அவசர மருத்துவ வாகனங்கள் அப்பகுதிகளுக்குள் எளிதில் நுழைந்துவிட முடியாது.

இதற்கிடையே, திருமூர்த்தி மலையை ஒட்டியுள்ள பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரை சாலை அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தளி பேரூராட்சி சார்பாக பணிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால் அதன் பிறகு அங்கு சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் குழிப்பட்டியைச் சேர்ந்த நாகம்மாள் என்ற பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் தொட்டில் கட்டி அழைத்து வரப்பட்டார். அப்பெண் தற்போது உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலை சார்ந்துள்ள ஏராளமான சிற்றூர்களில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்க முடியும்.

இது குறித்து சிற்றூர் மக்கள் கூறும்போது, “பல ஆண்டுகளாகவே அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம்.

“அவசர காலங்களில் உயிர்காக்கும் மருத்துவ வசதி கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. சாலை, போக்குவரத்து வசதி இல்லாததால் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்,” என்று ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்