சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மே 10-ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது. எனவே, அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்தத் தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தொடங்கிய அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முடிந்ததும் ஜனவரி 5ஆம் தேதி புதிய வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கான விவிபேட், கட்டுப்பாட்டு எந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை இருப்பு குறித்தும் வாக்குச்சாவடி பணியாளர்கள், எண்ணிக்கை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பதற்றமான தொகுதிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைப் போல் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏப்ரலில் எந்தத் தேதியில் தேர்தல் நடத்தினால் சரியாக இருக்கும் என்றும் விவாதித்தனர். இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும், எந்ததெந்தத் தேதியில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கேற்ப கல்வி நிலையங்களின் தேர்வுகள், உள்ளூர் பண்டிகை விடுமுறைகள், விழாக் காலங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. .