இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறிய திட்டம்: மு.க.ஸ்டாலின்

1 mins read
ee8487c7-46f7-430a-841d-9b50ef8ad6c8
உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறையைப் பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறு புகாருக்கும் இடமின்றி இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 7.35 லட்சம் பேர் இரண்டாம் கட்டமாக உரிமைத் தொகை பெறத் தேர்வாகி உள்ளனர்.

புதிய பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்குக்கே பணம் அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்வில் பேசிய அவர், உரிமைத் தொகை பெறுவதற்குத் தகுதியுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்றார்.

“உரிமைத் திட்டத்தில் மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தகுதியானோர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் அவர்களுக்கு தொகை வரவு வைக்கப்படும்.

“மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம். தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வரை திராவிட மாடல் அரசின் பணி தொடரும்,” என்றார் மு.க.ஸ்டாலின்.

மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது என்றும் முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்