சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள பல்வேறு மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மறைமுக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பில் குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிப்பதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.
இதே போல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் வீண் குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது மத்திய அரசு இம்மனுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.