சென்னை: ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தமக்கு வழங்கிய ஊக்கத்தொகையை தாம் படித்த நான்கு கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தமிழக அரசு அவருக்கு 25 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கி இருந்தது.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழுமலை தொழில்நுட்ப மையம், தாம்பரம் தனியார் கல்லூரி, திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப மையம், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. உள்ளிட்ட கல்வி மையங்களில் படித்தார் வீரமுத்துவேல்.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில் பணியாற்றிய முக்கியமான விஞ்ஞானிகளை விழா நடத்தி கௌரவித்தது தமிழக அரசு.
‘ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா ஒன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா, வீரமுத்துவேல் உள்ளிட்ட ஒன்பது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 25 லட்சம் ரூபாயை ரொக்கப் பரிசாக வழங்கியது தமிழக அரசு.
இந்த ஊக்கத் தொகையைத்தான், தாம் கல்வி பயின்ற நான்கு கல்லூரிகளுக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளார் வீரமுத்துவேல்.
‘சந்திரயான் 3’ திட்டப் பணிகளில் ஈடுபட்டு இருந்தபோதுதான் வீரமுத்துவேலின் இளைய சகோதரியின் திருமணம் நடைபெற்றது. அதில்கூட பங்கேற்காமல் சந்திரயான் பணிகளுக்கு அவர் முன்னுரிமை அளித்தார்.
தான் கல்வி பயின்ற கல்லூரிகளுக்கு அவர் நன்கொடை அளித்திருப்பதைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

