‘கடவுள் நல்லது ஏதும் செய்யவில்லை’: கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

‘கடவுள் நல்லது ஏதும் செய்யவில்லை’: கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

படம்: ஊடகம்

10 Nov 2023 - 7:20 pm

1 mins read

சென்னை: கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 வயது ஆடவரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

தாம் பல ஆண்டுகளாக அக்கோவிலில் வழிபட்டு வந்ததாகவும் ஆனால் தமது வேண்டுதல் எதையும் கடவுள் நிறைவேற்றவில்லை என்றும் முரளி கிருஷ்ணன் என்ற அந்த ஆடவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை அன்று வீரபத்திர சுவாமி கோவில் முன்பு நின்றுகொண்டு மதுபோதையில் கோபமாக ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார் முரளி கிருஷ்ணன். மேலும் தன் கைகளில் பெட்ரோல் குண்டு ஒன்றையும் வைத்து இருந்தார்.

இதைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருசிலர் முரளி கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் கோவிலுக்குள் இருந்தவர்களுக்கு விவரம் தெரிய வந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் வருவதற்குள் பெட்ரோல் குண்டை கோவிலை நோக்கி வீசினார் முரளி கிருஷ்ணன். இதனால் யாரும் காயம் அடையவில்லை என்றபோதிலும் மதுபோதையில் இருந்த முரளி கிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்