சிறப்புப் பேருந்துகள் மூலம் 3.66 லட்சம் பேர் பயணம்

சிறப்புப் பேருந்துகள் மூலம் 3.66 லட்சம் பேர் பயணம்

2 mins read
14b55ad1-bf41-40e8-aa9e-77007fd1737e
கோயம்பேடு பேருந்து நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கடந்த இரு நாள் களில் மட்டும் 3.66 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை நள்ளிரவு வரை மேலும் ஆயிரக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதாக தினகரன் ஊடகச் செய்து தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்குவது வழக்கம்.

இதன் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் சென்னைக்கு வந்து வேலை பார்க்கும் லட்சக்கணக்கானோர் பயனடைகின்றனர்.

அந்த வகையில், கடந்த இரு தினங்களில் மட்டும் 6,600க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒரே சமயத்தில் பல பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன. இதனால் ஒரு கட்டத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வருவதற்குப் பல பேருந்துகளுக்கு ஓரிரு மணி நேரங்கள் ஆயிற்று.

மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பகுதியில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால் விவரம் அறியாத பயணிகள் பலர் கோயம்பேட்டில் குவிந்ததால் நெரிசல் அதிகரித்தது.

இதற்கிடையே, சில பயணிகள் மாலை வேளையிலேயே பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்ட போதிலும் சில பேருந்துகள் இரவு 10 மணி வரை புறப்படவில்லை.

மேலும், சில பேருந்துகள் இரவு 12.30 மணி வரை பேருந்து நிலையத்திற்கு வந்து சேராததால் கோபமடைந்த பயணிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புறப்பட்ட சில பேருந்துகளை வெளியே செல்லவிடாமல் அவர்கள் மறித்து நின்றனர்.

இதற்கிடையே, சென்னையில் சனிக்கிழமை அன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, கோயம்பேடு முதல் தாம்பரம் பகுதி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று.

மாலை ஆறு மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை விடிய, விடிய இந்தப் போக்கு வரத்து நெரிசல் நீடித்ததாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்