தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான 8.42 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
e6d14454-a02b-4020-b8b0-41ed0b5254db
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம். - படம்: ஊடகம்

சென்னை: விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.4.55 கோடி மதிப்புள்ள 8.42 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் ரூ.112 கோடி மதிப்புள்ள 200 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஸ்ரீனிவாச நாயக் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஆடவரின் உடைமைகளைச் சோதித்தபோது, அதில் தரையில் துளையிடும் இயந்திரம் ஒன்று இருந்தது என்றும் அந்த இயந்திரத்துக்குள் மூன்று தங்க உருளைக் கட்டிகள் இருந்தன என்றும் ஸ்ரீனிவாச நாயக் குறிப்பிட்டார்.

“அவரிடம் இருந்து 3.49 கிலோ எடை கொண்ட ரூ.1.88 கோடி மதிப்பிலான தூய்மையான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

“இதேபோல், மற்றொரு சம்பவத்தில் நவம்பர் 11ஆம் தேதி குவைத்தில் இருந்து அபுதாபி வழியாக சென்னை வந்த ஆடவரும் தங்கக் கடத்தலில் சிக்கினார். அவரது உடைமை களைச் சோதனையிட்டபோது, மூன்று எல்.இ.டி. விளக்குகளில் ஒன்பது தங்கக் கட்டிகள், 3 தங்கத் தகடுகள், 3 தங்க வெட்டுத்துண்டுகள் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“அவரிடம் இருந்து ரூ.2.67 கோடி மதிப்புள்ள 4.93 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது,” என்றார் ஸ்ரீனிவாச நாயக்.

உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் கடந்த ஒரு வாரமாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்