தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் பட்டாசு வெடித்த 580 பேர் மீது வழக்கு

2 mins read
2bf413c6-6020-4995-8fe3-8aea48437192
கடந்த மூன்று நாள்களாக சென்னையில் பட்டாசு சத்தம் இடைவிடாமல் ஒலித்தது. - படம்: ஊடகம்

சென்னை: அனுமதிக்கப்பட்டநேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மட்டும் 580 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் மீறி பட்டாசுகள் வெடித்த 580 பேர் மீது வழக்குப் பதிவானது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ரூ.6 ஆயிரம் கோடி பட்டாசுகள் விற்பனை

இம்முறை தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன.

முன்னதாக பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும், தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் அளிக்கவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

இரு நாள்களாக தொடர்ந்து வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்தது.

சென்னை மாநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு அபாயக்கட்டம் எனக் கருதப்படும் வகையில் 250 புள்ளிகளாக அதிகரித்தது.

பல்வேறு பகுதிகள் சுவாசிக்க தகுதியற்ற இடங்களாக மாறி உள்ளதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஏஷியா நெட் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

148 இடங்களில் தீ விபத்து

தீபாவளியன்று சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. தீயணைப்புத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் இருவருக்கு மட்டுமே தீக்காயம் ஏற்பட்டது என்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்காமல் பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடியது மனநிறைவு அளிப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 பேர்

பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் 19,600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளியன்று மட்டும் சென்னையில் நூறு டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வழக்கமாக சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் 6,850 மெட்ரிக் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில், 19,600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மொத்தம் 275 டன் கழிவுகளை அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தீபாவளி வேளையில் மூன்று நாளில் மட்டும் ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டைவிட விற்பனை அளவு அதிகரித்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்