திருச்சி: திருச்சியில் மோதலை வேடிக்கை பார்த்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அருகே உள்ள புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார், 32, கட்டடத் தொழிலாளி. இவர் தீபாவளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.
அவரது வீட்டின் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதை வேடிக்கை பார்த்தபோது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான உதயகுமார் கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் உதயகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருச்சி மருத்துவமனையில் திரண்டனர். உதயகுமாரின் சாவுக்கு காரணமான நபர்களை கைது செய்யக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிதடி மோதலை வேடிக்கை பார்த்தவர் கொலையான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

