வெடிச் சத்தத்திற்குப் பயந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை

வெடிச் சத்தத்திற்குப் பயந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை

2 mins read
ab066f9a-89ff-43f3-bfc2-196f6019e5a2
வீட்டிலிருந்து வெளியேறிய சிறுத்தை. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

நீலகிரி: குன்னூரில் வீட்டிற்குள் புகுந்து 6 பேரைத் தாக்கி, வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை 26 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே வீட்டிலிருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குன்னூர் அருகே புருக்லேண்ட்ஸ் பகுதியில் நாயைத் துரத்தி வந்த சிறுத்தை, விமலா என்பவரின் குடியிருப்பு பகுதிக்குள் தீபாவளியன்று காலை 4 மணியளவில் நுழைந்தது. சிறுத்தை வீட்டிற்குள் இருப்பதைப் பார்த்த வீட்டின் உரிமையாளர், தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் இருந்த சிறுத்தை செய்தியாளர் உட்பட தீயணைப்புத் துறையினர் ஆறு பேரைத் தாக்கி காயம் ஏற்படுத்தியது. அதனால் சிறுத்தை தாக்கி காயமடைந்தவர்களுக்கு குன்னூர் மற்றும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்து இருந்தது. அதனைத்தொடர்ந்து 3 ‘சிசிடிவி கேமரா’ மற்றும் ஒரு தானியங்கி கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் அந்த சிறுத்தைக்கு எந்த தொந்தரவும் செய்யாமல், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை ஆய்வு செய்ததில் தீபாவளி அன்று இரவு 10 மணியளவில் சிறுத்தை தானாகவே வீட்டில் இருந்து வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

குடியிருப்பிற்குள் புகுந்து 6 பேரைத் தாக்கி, 26 மணி நேரத்திற்குப் பிறகு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.