சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 4,970 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார்நிலையில் இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார்நிலையில் இருப்பதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் அண்மையில் 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாகை, கடலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாகத் தெரிவித்தார்.
“மாநிலம் முழுவதும் புயல், பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார்நிலையில் உள்ளன. கன மழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் நானூறு மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்,” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.
நீர் நிலைகள் நிரம்பும்போது பொதுமக்களுக்கு உரிய தகவல் கொடுத்த பிறகே தண்ணீர் திறந்து விடப்படும் என்றார் அவர்.
சென்னையில் 169 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநகரில் உள்ள 22 சுரங்கப் பாதைகளும் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 85 விழுக்காடாகவும், புழல் ஏரியில் நீர் இருப்பு 82 விழுக்காடாகவும் உள்ளது என்றார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சுதாகரன் கடிதம் வழி கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவித தேவையையும் சமாளிக்க ஏதுவாக மாவட்ட நிர்வாகங்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பலத்த மழை காரணமாக சில விமானங்களுக்கான பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை பெங்களுரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்குச் செல்லும் விமானமும் ரத்தானது.
சில விமானங்களின் வருகையும் புறப்பாடும் தாமதமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள மரக்காணம் பகுதியில் 3000 ஏக்கர் பரப்பிலான உப்பளம் மழைநீரில் மூழ்கியுள்ளது. அங்கு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. இதேபோல் சீர்காழி பகுதி யில் 50 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. டெல்டா மாவட்டங்களிலும் இதே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.