சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. சளி, காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா புதன்கிழமையன்று காலை 9.30 மணியளவில் காலமானதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சங்கரய்யாவின் மறைவு அரசியல் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக சங்கரய்யாவின் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்,” என்று கூறி உள்ளார்.
மூன்று முறை எம்எல்ஏவாக பணியாற்றியுள்ள தியாகி சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது.

